
புதுடெல்லி, மே 8- இந்தியாவின் மின் வாகன துறை, நடப்பு 2026- 27 நிதியாண்டை மிக வலுவான வளர்ச்சியுடன் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் இதுவரை இல்லாத அளவாகப் 41 சதவீத புதிய உச்சத்தை மின் வாகன விற்பனைத் தொட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசின் வாகன் இணையதள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரலில் இரு சக்கர, மூன்று சக்கர, பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்கள் என அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 2,39,025 மின்சார வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த 2025 ஏப்ரலில் விற்பனையான 1,69,360 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 41 சதவீத வளர்ச்சியாகும். இந்திய மின்சார வாகனச் சந்தையில் இரு சக்கர வாகனப் பிரிவே பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1,48,740 மின் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகி உள்ளன. இது முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாத விற்பனையை விட (92,536 வாகனங்கள்) 61 சதவீதம் அதிகமாகும். மொத்த மின்சார வாகன விற்பனையில் இரு சக்கர வாகனங்களின் பங்கு மட்டும் 62 சதவீதமாக உள்ளது. இவ்வாறு தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு குறித்த அச்சம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோக நெருக்கடி காரணமாக, வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்களை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுவதாகத் இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, ஏதர் எனர்ஜி மற்றும் ஹீரோ விடா ஆகிய 5 நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் 84 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன. மூன்று சக்கர மின் வாகன விற்பனை கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்து 64,549 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. மொத்த 3 சக்கர வாகன விற்பனையில் மின்சார மாடல்கள் சுமார் 60 சதவீதப் பங்கைப் பிடித்துள்ளன. இதன் மூலம் சிஎன்ஜி 3 சக்கர வாகனங்களின் ஆதிக்கத்தை இவை மெல்லக் குறைத்து வருகின்றன. மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களுக்கு இடையே இப்பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது.
மின் கார்கள் 73% உயர்வு: பயணிகள் வாகனப் பிரிவில் (கார்கள், எஸ்யூவி) வியக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏப்ரலில் 23,265 மின்சாரக் கார்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 73 சதவீத வளர்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் 8,500 வாகனங்களுடன் 37% சந்தைப் பங்கைப் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. சரக்கு மற்றும் போக்குவரத்து வாகனப் பிரிவில் 148 சதவீத அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 2,236 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதில் சிறிய ரகச் சரக்கு வாகனங்களின் பங்களிப்பு மட்டும் 81 சதவீதமாகும். மின்சாரப் பேருந்துகள் விற்பனையும் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்பிரிவில் டாடா மோட்டார்ஸ் 36 சதவீத சந்தைப் பங்களிப்புடன் முன்னிலையில் உள்ளது. மஹிந்திரா & மஹிந்திரா 5,394 வாகனங்களுடன் ஜேஎஸ்டபிள்யூ, எம்.ஜி மோட்டார் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.


















