
கொல்கத்தா: மே 27-
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
மேற்குவங்கத்தின் தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரி, ஒரு காலத்தில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்தார். முந்தைய காலத்தில் அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்த சூழலில் மேற்குவங்கம் முழுவதும் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
குறிப்பாக பட்பாரா நகராட்சியில் ஒரே நேரத்தில் 30 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். ஹலிசஹர் நகராட்சியில் 16, கஞ்சரபாரா 14, கருலியா நகராட்சியில் 18, நார்ட் பாரக்பூர் நகராட்சியில் 15, கொண்டாய் நகராட்சியில் 14 கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து மேற்குவங்க அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “கடந்த கால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் விவகாரங்கள் குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் திரிணமூல் கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அச்ச உணர்வின் காரணமாக ஒரே நேரத்தில் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.
முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் கொல்கத்தாவில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி காக்லி கோஷ் தஸ்திதார் பங்கேற்றார். இவர் சில நாட்களுக்கு முன்பு திரிணமூலின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த அனிசூர் ரஹ்மான் பிதேஷ், புர்கானுல் முகாதீன், வீணா மண்டல், அப்துல் மாதின் ஆகிய 4 எம்எல்ஏக்கள் முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் சில திரிணமூல் எம்எல்ஏக்களும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 208 இடங்களை கைப்பற்றி உள்ளது.


















