Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ:பயணிகள் அலறியடித்து ஓட்டம்

பெங்களூரில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ:பயணிகள் அலறியடித்து ஓட்டம்

பெங்களூரு: மே 27-
பெங்களூரு தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, மீண்டும் சென்னைக்கு புறப்படத் தயாராக ரன்வேயில் நகர்ந்து சென்றது.
அப்போது, விமானத்தின் உள்பகுதியில் திடீரென கரும்புகை சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்தனர். உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அவசர கதவுகள் திறக்கப்பட்டன. அதில் இருந்த ஊதப்பட்ட அவசர சறுக்குக் குழாய்கள் மூலமாக பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறக்கி விடப்பட்டனர்.
முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு பயணிகள் பதற்றத்துடன் ஓடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவியது.
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத்தில் இருந்த பயணிகள் 170 பேரும், ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவர்களுக்குத் தேவையான உதவிகளை எங்கள் குழுவினர் செய்து வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
விமானம் பின்னோக்கி தள்ளப்பட்டபோது கேபினில் புகை வந்ததாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.