
ஹாசன்: ஜூன் 3-
கல்லூரிக்கு பைக்கில் அழைத்துச் செல்வதாகக் கூறி, தெரிந்த சிறுமி ஒருவரை ஆள்நடமாட்டமற்ற பகுதிக்குக் கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து தப்பிக்க சிறுமி ஓடும் பைக்கில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கர்நாடக மாநிலம் ஹாசன் நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று, இவருக்கு அறிமுகமான வாலிபர் ஒருவர், கல்லூரிக்கு பைக்கில் ‘டிராப்’ செய்வதாகக் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த மாணவியும் பைக்கில் ஏறியுள்ளார்.
ஆனால், அந்த வாலிபர் கல்லூரிக்குச் செல்லாமல், மாணவியை ஒரு ஆள்நடமாட்டமில்லாத வெறிச்சோடிய பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து மீண்டும் அழைத்து வரும்போது, “நடந்ததை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன்” என்று அந்த வாலிபர் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சியும் பயமும் அடைந்த அந்த மாணவி, ஓடிக்கொண்டிருந்த பைக்கில் இருந்து திடீரென கீழே குதித்தார்.
இதில் மாணவிக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஹாசன் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட வாலிபர் கல்லூரி படித்துக்கொண்டே பானிபூரி கடை நடத்தி வருவது தெரியவந்தது. அவரை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் அந்த வாலிபருக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர்கள் 2 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.


















