
பெங்களூரு: ஜூன் 20-
காதணிக்கு ஆசைப்பட்டு 80 வயது மூதாட்டியின் காதை அறுத்து, கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் தாலுகா பசவன்புரா கிராமத்தில் நடந்துள்ளது.
தொட்டபள்ளாப்பூர் தாலுகா கீழ்கஜூகானஹள்ளியைச் சேர்ந்த சுப்பம்மா (80) என்பவரே பலியானவர் ஆவார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பசவன்புராவில் உள்ள தனது 5-வது மகளின் வீட்டில் வசித்து வந்தார்.
சுப்பம்மாவின் மகள் மற்றும் குடும்பத்தினர் கட்டிட வேலை கூலித்தொழிலுக்குச் சென்று விடுவது வழக்கம். இதனால் பகல் நேரத்தில் சுப்பம்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று மதியம் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டியை ஓங்கி அடித்து, அவரது காதை அறுத்து கம்மலைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
மாலை மகள் வீட்டிற்கு வந்தபோது சுப்பம்மா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தலையில் பலத்த காயமடைந்திருந்த அவரை மீட்டு உடனடியாக எலஹங்கா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த மஞ்சேனஹள்ளி போலீசார் மற்றும் எஸ்பி, ஏஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.


















