Home மாவட்டங்கள் பெங்களூர் 14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

செங்கல்பட்டு: ஜூன் 24-
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே, இயற்கை உபாதைக்காக ஒதுங்கிய 14 வயது சிறுமியை கடத்திச் சென்று, இருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாகச் சிறார்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சம்பவங்கள் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது செங்கல்பட்டில் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே இயற்கை உபாதைக்காக வெளியில் சென்ற அந்த சிறுமியை இருவர் கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கடத்தி சென்ற இருவர், பலாத்காரம் செய்துள்ளனர். பயத்தில் சிறுமி கத்த முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் யாராவது வந்துவிடுவார்களோ என்று அஞ்சிய அந்த இரண்டு மிருகங்களும், சிறுமியின் வாயில் துணியைத் திணித்து பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூரத்தால் நிலைகுலைந்த சிறுமியை அங்கேயே போட்டுவிட்டு அவர்கள் தப்பியோடினர். இந்த கொடூரம் தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டது மகேஷ்வரன் (20) மற்றும் அஜய் (27) என்பது தெரிய வந்தது. அவர்களை சில மணி நேரங்களிலேயே போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.