
ஆர்லிங்டன், ஜூன் 29- உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் ஜே பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்ஜெண்டினா ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டான் அணியை வென்றது. டல்லாஸ் மாகாணம் ஆர்லிங்டனிலுள்ள ஏடி அன்ட் டி மைதானத்தில் இந்த ஆட்டம் நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏற்கெனவே நாக்-அவுட் சுற்றுக்கு அர்ஜெண்டினா முன்னேறி விட்டதால், அணியில் 9 மாற்றங்களை பயிற்சியாளர் செய்திருந்தார். நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். ஆனாலும், அர்ஜெண்டினா அணி ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கியோவனி லோ செல்ஸோ ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். பாக்ஸ் பகுதியில் 20 அடி தூரத்தில் இருந்து அவர் அடித்த ஃபிரீ கிக்கை, ஜோர்டான் கோல்கீப்பர் யாசித் அபுலைலாவால் தடுக்க முடியவில்லை. கோல்கம்பத்தின் வலது பக்கத்தை அந்த பந்து துளைத்தது.அர்ஜெண்டினா தொடர்ந்து பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், 31-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை அடித்தது. இந்த கோலை அர்ஜெண்டினா வீரர் லவுடேரா மார்ட்டினஸ் செலுத்தி அணி வீரர்களை உற்சாகத்துக்கு உள்ளாக்கினார். இதனால் முதல் பாதி வரை 2-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியின்போது ஆக்ரோஷமாக விளையாடிய ஜோர்டான் 55-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தது. அந்த அணியின் முசா அல்-தாமாரி இந்த கோலை அடித்தார். இந்நிலையில் 60- வது நிமிடத்தில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு இடையே லயோனல் மெஸ்ஸி களமிறக்கப்பட்டார். 80-வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் மூலம் அற்புதமான கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார் மெஸ்ஸி. இதனால் அர்ஜெண்டினா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.





















