
டோக்கியா, ஜூலை 20-ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வந்தனர். இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ராங்கிரெட்டி ஜோடி, தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மகளிர் ஒற்றையர் பிரிவுக்கு தகுதி பெற்றதன் மூலம் ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் பி.வி.சிந்து. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் மோதினார்.இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தல் சாதனை புரிந்தார். ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் பெற்றவரான பிவி சிந்து கடந்த 2 ஆண்டாக சர்வதேச பட்டம் எதுவும் வெல்லாத நிலையில், தற்போது ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அவர் கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மேலும் ஜப்பான் ஓபன் பாட்மிண்டனில் பட்டம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பி.வி.சிந்து பெற்றார்.
















