Home தலைப்பு செய்தி 5 முதல் 10 ஆண்டு சிறை ரூ.1 கோடி அபராதம்

5 முதல் 10 ஆண்டு சிறை ரூ.1 கோடி அபராதம்

புதுடெல்லி: ஜூலை 24-
‘நீட்’ வினாத்தாள் கசிவு தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் வினாத்தாள் கசிவு தொடர்பாக உடனடியாக விசாரித்து கடும் தண்டனை வழங்க பிரதமர் மோடி உத்தரவின்பேரில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வினாத்தாள் கசிவு வழக்கில் கடும் தண்டனை வழங்கும் அம்சம் பற்றி பிரதமர் மோடி இன்று அமைச்சரவையில் விவாதிக்க உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி ‘ஜந்தர் மந்தர்’ பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் பிரதமர் மோடி வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். சட்டம் கடுமையாக்கப்படும் என்று கூறினார்.
இதுதொடர்பாக இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் வினாத்தாள் கசிவிற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தற்போது நடைமுறையில் இருக்கும் பொது தேர்வுகள் (முறைகேடு வழிமுறைகள் தடுப்பு) சட்டம் 2024 சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. தற்போது வினாத்தாள் கசிவு வழக்கில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். ஆனால் இந்த புதிய சட்டத்தில் தண்டனை காலம் மற்றும் அபராதம் அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி வினாத்தாள் கசியவிட்டால் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கவும், ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக சட்ட நுணுக்கங்கள் பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் வழங்கி உள்ளனர். இதுபற்றி இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார். அதன்பிறகு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்து நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி நேற்று நள்ளிரவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”வினாத்தாள் கசிவு என்பது சாதாரண விஷயமல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இதனால் கடந்த இரண்டரை மாதங்களில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுரை வழங்கினேன். அதிகாரிகள் என்னிடம் வரைவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளனர். விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான அம்சங்களை கொண்ட இந்த வரைவுத் திட்டம் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். அமைச்சரவை சகாக்களின் ஆலோசனைகளை கேட்டு அதுபற்றி இறுதி செய்யப்படும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.