Home செய்திகள் தேசிய செய்திகள் ஆந்திராவில் 44.71 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்

ஆந்திராவில் 44.71 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்

அமராவதி: ஜூலை 27-
வாக்காளர் சிறப்பு திருத்தத்தின் முதல் கட்டப் பணிகள் (எஸ்ஐஆர்) முடிவுற்றதை தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4.16 கோடியாக உள்ளது. மேலும், 44.71 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் நேற்றுமுன்தினம் மாநில தேர்தல் ஆணையர் விவேக் யாதவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “ஆந்திர மாநிலத்தில் முதல்கட்ட எஸ்ஐஆர் பதிவுகளின் அடிப்படையில் மொத்தம் 4 கோடியே 16 லட்சத்து 27,694 வாக்காளர்கள் உள்ளனர். அந்தந்த முகவரிகளில் இல்லாதவர்கள் 7,76,900 பேர். ஆந்திராவை விட்டு வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி நாடுகளுக்கோ நிரந்தரமாக சென்று விட்டவர்களின் எண்ணிக்கை 14,34,112 ஆக உள்ளது.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்து போனவர்கள் மொத்தம் 15,19,558 பேர். இரு ஊர்களிலும் இடம் பெற்றவர்கள் 7,32,566 பேர். மற்றவர்கள் 8,387 பேர் என தெரிய வந்துள்ளது. மொத்தம் 44,71,523 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நெல்லூர் மாவட்டம் உள்ளது. இங்கு மொத்தம் 2,90,579 வாக்காளர்களின் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன.அடுத்தபடியாக திருப்பதி மாவட்டத்தில் 2,87,759 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி வரை பொதுமக்கள் இதுகுறித்து ஏதாவது சந்தேகமோ அல்லது தனிப்பட்ட கருத்தோ இருந்தால் தெரிவிக்கலாம்.அதன் பின்னர், செப்டம்பர் 28-ம் தேதிக்குள் வாக்காளர்கள் தெரிவித்த கருத்துக்கள் பரிசீலிக்கப்படும். அக்டோபர் 3ம் தேதி இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையர் விவேக் யாதவ் தெரிவித்தார்.