
சென்னை: ஜூலை 27-
மாமல்லபுரத்தில் நடக்கும், தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க, வரும் ஆக., 1ம் தேதி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தமிழகம் வருகிறார்.
தமிழக காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர்களுக்கு, கடந்த 23ம் தேதி முதல் வரும் ஆக., 1 வரை, மாமல்லபுரத்தில், 10 நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. வரும் 2029 லோக்சபா தேர்தலுக்கு, ‘பூத் கமிட்டி’ நிர்வாகிகளை தயார்படுத்துவது, தேர்தல் உத்தி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
முகாமின் இறுதி நாள், நிகழ்வில் ராகுல் பங்கேற்று, காங்., மாவட்டத் தலைவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். மேலும், ஒரு கிராமத்தில், ஒரு நாள் இரவு தங்கி, மக்களிடம் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அந்த திட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தமிழகம் வரும் ராகுல், முதல்வர் விஜயை சந்திக்க உள்ளார். சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகம் அல்லது நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில், இந்த சந்திப்பு நடைபெறும். மாமல்லபுரத்தில் நேற்று நடந்த பயிற்சி முகாமில், அகில இந்திய காங்., பொதுச்செயலர் வேணுகோபால் பங்கேற்று, மாவட்ட தலைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த வேணுகோபால் ”வரும் ஆகஸ்ட் 1ம் தேதி, மாமல்லபுரத்தில் நடைபெறும் மாவட்ட காங்., தலைவர்கள் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்கிறார். ”மாணவர் போராட்டத்தால், மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது, மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி,” என தெரிவித்தார்.













