
மதுரை: ஜூலை 29-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்னாள் சார் பதிவாளர்கள், வட்டாட்சியர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பாண்டிய மன்னர்கள், விஜய நகரப் பேரரசர்கள், கர்நாடக மன்னர்கள் உட்பட பலர் ஏராளமான நிலங்களை நன்கொடையாக வழங்கி உள்ளனர். அதற்காகப் பல்வேறு கட்டளைகளையும் ஏற்படுத்தி உள்ளனர். அந்தக் கட்டளைகளில் ஒன்றுதான். புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரை ராஜா, துரை ராணி அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த 1930 ஜூன் 6-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் உயில் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோவிலுக்குத் தர்ம காரியங்கள் செய்ய மதுரை அழகர் கோவில் ரோடு, பிபீகுளம் ஹக்கிம் அஜ்மல் கான் சாலையில் உள்ள 1.79 ஏக்கர் (0.72640 சதுர மீட்டர்) ‘அசோக விலாஸ்’ பங்களா மற்றும் தோட்டம் ஆகிய சொத்துகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயில், கோயில் டிரஸ்டிகள், மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில், முக்குறுணி விநாயகர் கோயிலில் சிறப்பு அர்ச்சனை, நெய்வேதியம், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க வேண்டும். அழகர் கோவில் கருப்பணசாமிக்குச் சந்தனக் கும்பா எடுக்க
வேண்டும்.
இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேரும் 2 ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், ஆண்டுதோறும் 100 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். இதற்காக அசோக விலாஸ் பங்களா, தோட்டத்தை வாடகைக்கு மட்டுமே விடவேண்டும். கிரயம், அடமானம், ஒத்தி போன்ற எந்த செயலும் செய்ய கூடாது என்று அந்த உயிலில் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.இந்நிலையில், 2016 ஜூன் 24-ம் தேதி கோயில் பெயரில் இருந்த அந்த சொத்தை வெள்ளைச்சாமி பல்லவராயர் மனைவி ராமாயி ஆயியார் உட்பட 9 பேரின் பெயருக்கு மதுரை வடக்கு வட்டாட்சியர் பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், வட்டாட்சியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட விஏஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோட்டாட்சியர் விசாரணை அடிப்படையில் வட்டாட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது.













