Home தலைப்பு செய்தி 13 பேர் மீது குற்றப்பத்திரிகை

13 பேர் மீது குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: ஜூலை 29-
நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பிற்கும் அரசியல் பரபரப்பிற்கும் காரணமான நீட் யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிற்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 13 குற்றவாளிகளுக்கு எதிராக 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை (சார்ஜ்ஷீட்) சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
தேசிய தேர்வு முகமையின் (என்.டி.ஏ) 3 பாட நிபுணர்கள், பயிற்சி மையங்களின் தலைவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 13 பேர் இந்த வழக்கில் முதன்மை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் வழக்கு பற்றிய முழு விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
என்.டி.ஏ பாட நிபுணர்கள் பி.வி. குல்கர்னி வேதியியல் (கெமிஸ்ட்ரி) பாட நிபுணர், மனிஷா குருநாத் மந்தாரே உயிரியல் (பயாலஜி) பாட நிபுணர், மனிஷா சஞ்சய் ஹவால்டார்: இயற்பியல் (ஃபிக்சிக்ஸ்) பாட நிபுணர், (பயிற்சி மையங்களின் பிரதிநிதிகள் மற்றும் டாக்டர்கள்).
டாக்டர் மனோஜ் ஷீரூரே லாத்தூர் சேர்ந்த டாக்டர், தேஜஸ் ஹர்ஷத் குமார் ஷா புனேவின் ‘ஏபிஎம்ஏ’ பயிற்சி மையத்தின் இயற்பியல் ஆசிரியர், சிவராஜ் ரகுநாத் மோடேகாவ்ங்கர் (லாத்தூர் சேர்ந்த தனியார் பயிற்சி மைய உரிமையாளர்).
யஷ் யாதவ், மாங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஸ் பிவால், சுபம் கைர்னார், தனஞ்சய் லோகண்டே மற்றும் மனிஷா வாக்மரே. சிபிஐ வழக்கு விசாரணைக்காக 72 விசாரணை அதிகாரிகள் மற்றும் 8 சைபர் தடயவியல் நிபுணர்களைக் கொண்ட பிரமாண்ட குழுவை அமைத்திருந்தது.
குற்றவாளிகளுக்கு எதிராக பலமான சான்றாக 360 சாட்சிகள், 422 ஆவணங்கள் மற்றும் 43 பொருள் சார்ந்த சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி உட்பட நாட்டின் 92 வெவ்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி டிஜிட்டல் சாதனங்கள், மொபைல் போன்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது. கைதாகியுள்ள 13 குற்றவாளிகளும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை கண்டறிந்துள்ள விசாரணை அமைப்பு, குற்றவாளிகளுக்கு சொந்தமான பல வங்கி கணக்குகள், லாக்கர்கள் மற்றும் டிமேட் கணக்குகளை முடக்கியுள்ளது.
குற்றவாளிகளுக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதாவின் ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம், சாட்சியங்களை அழித்தல், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுத் தேர்வு (அக்கிரமத் தடுப்பு) சட்டம், 2024-ன் கீழ் கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வினாத்தாள் கசிந்த மூலத்தை தொடக்கம் முதல் முடிவு வரை கண்டறிந்துள்ளதாகவும், மீதமுள்ள சந்தேக நபர்கள் மற்றும் என்.டி.ஏ அதிகாரிகளின் பங்கு குறித்து கூடுதல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.