
புதுடெல்லி, ஜூலை 31- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் உரிமை மீறல் நோட்டீஸை வழங்கியுள்ளார். மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது வினாத்தாள் கசிவு மற்றும் இளைஞர்கள் போராட்டம் குறித்து ராகுல் காந்தி பேசும்போது “தங்களுக்கு எல்லாமே தெரியும் என நினைப்பவர்கள் முட்டாள்கள்” என்று குறிப்பிட்டார். இது பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பையும் அமளியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் மற்றும் அவமதிப்பு நோட்டீஸை பாஜக எம்.பி.அனுராக் தாக்குர் சமர்ப்பித்தார். இந்த நோட்டீஸ் மீது அவையில் இன்று (ஜூலை 31) விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உயர்நிலைக் குழு அமைக்க கோரிக்கை: இந்நிலையில் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய விவகாரத்தில் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தனது மற்றொரு பதிவில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது: டெல்லி போராட்டத்தில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா ஏன் இவ்வளவு பயப்படுகிறார் ? மாணவர்கள் மீது தடியடி, பெல்லட் குண்டுகள் பிரயோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.













