Home செய்திகள் தேசிய செய்திகள் மோடி தொடர்பாக போலி ஏஐ வீடியோக்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு

மோடி தொடர்பாக போலி ஏஐ வீடியோக்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு

புதுடெல்லி: ஜூலை 31-
பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அருண் ஸ்ரீனிவாஸ் மீது ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
டில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையிலான இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடியைக் குறிவைத்து செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட, உருமாற்றப்பட்ட போலி வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான தளங்களில் போலி வீடியோக்கள் பரவியது மக்களைத் தவறாக வழிநடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகள் மீறப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர். தற்போது போலி ஏஐ வீடியோக்கள் வைரலானதை அடுத்து, ஐதராபாத் போலீசார் மெட்டா நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் சில சமூக வலைத்தள பயனர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தத் தளங்கள் வழியாகத் தவறான தகவல்கள் மற்றும் ஏஐ போலி வீடியோக்கள் மக்களிடையே பரவி குழப்பத்தை ஏற்படுத்தியதா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.