Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் மீது பயங்கர தாக்குதல் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

ஈரான் மீது பயங்கர தாக்குதல் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

வாஷிங்டன்: ஆக. 1–
மத்திய கிழக்கில் மாதக்கணக்கில் நடந்து வரும் போர் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. ஈரான் மீது மற்றொரு கட்டப் பயங்கர ராணுவத் தாக்குதலை நடத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் திரைக்குப் பின்னால் தயாராகி வருகின்றன. இந்த முறை ஈரானுக்கு மிகக் கொடூரமான அடி”கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் ‘தி வால் ஸ்டிரீட் ஜர்னல்’ மற்றும் ‘சி.பி.எஸ். நியூஸ்’ செய்திகளின்படி, இந்த வார இறுதியில் புதிய கட்ட ராணுவ நடவடிக்கை தொடங்க வாய்ப்புள்ளது. ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி மையங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்த வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஈரானை முழுமையாகச் சரணடைய வைக்கவும், அதன் பொருளாதார-ராணுவப் பின்னடைவை ஏற்படுத்தவும் டிரம்ப் நிர்வாகம் இந்தக்கடுமையான முடிவை எடுத்துள்ளது.
மேரிலாந்தில் உள்ள ‘கேம்ப் டேவிட்’ அதிபர் இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், நாங்கள் ஈரானுக்கு மிகக் கொடூரமான அடியைக் கொடுக்கப்போகிறோம். ‘இனிமேல் இந்த அடியைத் தாங்க எங்களால் முடியாது’ என்று அவர்களாகவே வந்து சரணடையும் நாள் விரைவில் வரும் என்று கூறினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலுடன் இந்த மோதல் தொடங்கியது. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ஈரானின் ஒவ்வொரு முக்கிய பாலத்தையும் மின் உற்பத்தி நிலையத்தையும் தகர்ப்போம் என்று டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
இந்த புதிய தாக்குதல் திட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேலியப் படைகளும் நேரடியாகக் களமிறங்குகின்றன.
இந்த தீவிரத் தாக்குதலால் ஏற்படக்கூடிய உலகளாவிய விளைவுகள் குறித்து வெள்ளை மாளிகையின் சில ஆலோசகர்கள் கவலை தெரிவித்துள்ள போதிலும், ராணுவ நடவடிக்கைக்கு இறுதி ஒப்புதல் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.