
சென்னை, ஆக, 3- ஏழ்மையான விவசாயக் குடும்பத்திலிருந்து இன்று வெற்றிகரமான விளையாட்டு வீரராக மாறியிருக்கிறார் இந்திய தடகள வீரர் பிரவீன் சித்ரவேல். அவரது எழுச்சிமிகு வெற்றிப் பயணம் இளைய தலைமுறைக்கு உத்வேகமான பாடமாக மாறியுள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் டிரிப்பிள் ஜம்ப்பில் (மும்முறைத் தாண்டுதல்) இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்திய தேசியக் கொடியை சர்வதேச அரங்கில் பறக்கவிட்டு பெருமை சேர்த்துள்ளார். இவர் தமிழகத்தின் திருவாரூர் மன்னார்குடிக்கு அருகிலுள்ள செட்டிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த பிரவீன் சித்ரவேல் இன்று சர்வதேச விளையாட்டு அரங்கில் ஜொலிக்கும் நட்சத்திரமாக மாறியுள்ளார். மேலும் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றது குறித்து பிரவீன் சித்ரவேல் கூறியதாவது: கடந்த 2022-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின்போது 2 செ.மீ. வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்தேன். அது என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. இந்தமுறை அதிதீவிரப் பயிற்சியுடன் களமிறங்கினேன். திறம்பட செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது மகிழ்ச்சி. நான் மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பத்திலிருந்து விளையாட்டுத் துறைக்கு வந்தேன். எனது தந்தை சித்ரவேல், விவசாய தினக்கூலி தொழிலாளி. என்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து, விளையாட்டுத்துறைக்கு அனுப்பினார். கிளாஸ்கோ போட்டியின்போது நான் அதிக அழுத்தத்தை மனதில் ஏற்றிக்கொள்ளவில்லை. கிளாஸ்கோவில் கடும் குளிர் நிலவியது. உடலை அசைப்பதே கடினமாக இருந்தது. இருப்பினும் என்னுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். அதன்படியே செயல்பட்டு பதக்கத்தைக் கைப்பற்றினேன். தற்போது என்னுடைய அடுத்த இலக்கு ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிதான். இந்தப் போட்டியில் பதக்கம் வெல்லவேண்டும் என்பதற்காக பயிற்சி எடுத்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரவீனின் தந்தை சித்ரவேல் கூறும்போது, “நான் ஒரு விவசாய தினக்கூலித் தொழிலாளி. ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம். பயிற்சி நாட்களில் நான் எனது மகனை என் மிதிவண்டியில் அழைத்துச் செல்வேன். சிறிது சிறிதாக முன்னேறி இன்று சர்வதேச அளவில் பதக்கம் வெல்லும் நிலைக்கு அவர் சென்றுள்ளார்.
















