Home செய்திகள் தேசிய செய்திகள் ‘இடஒதுக்கீடு இல்லா இந்தியா’ – வலுக்கும் இணையவழி போராட்டமும் பின்புலமும்

‘இடஒதுக்கீடு இல்லா இந்தியா’ – வலுக்கும் இணையவழி போராட்டமும் பின்புலமும்

புதுடெல்லி, ஆக. 7- டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது பக்கவாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமாகிக் கொண்டிருந்தார் ஹர்ஷ் துபே என்ற இளைஞர். “சாதி ரீதியிலான இடஒதுக்கீடுகளால் மாணவர்கள் மன அழுத்ததுக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் தற்கொலைகள் நிகழ்கின்றன” என்று காரசாரமாக அவர் வாதிட, அடுத்தடுத்த 10-க்கும் மேற்பட்ட ஊடக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவனம் பெற்றார். ஹர்ஷ் துபே இப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்கு அனுமதி கோரி வருகிறார்.இதற்கிடையில், நாட்டில் ஆங்காங்கே Reservation Hatao Andolan (RHA) ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்க’ என்று போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. இதே பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கமும் உருவாக்கப்பட்டு அதற்கு 5.9 மில்லியன் ஃபாலோயர்களும் இருக்கின்றனர். கடந்த வாரம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்’ என்ற முழக்கத்துடன் முதல் போராட்டம் களம் கண்டது.அதன்பின்னர் ஜெய்ப்பூரில் ஸ்ரீ ராஜ்புட் கர்னி சேனாவினர் போராட்டம் நடத்தினர். இதே கோரிக்கையுடன் அவர்கள் வீதிகளில் திரண்டு சற்று ஆக்கிரோஷமாகக் கோஷமிட, போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக் களத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று கர்னி சேனாவினர் அவர்களின் குல தெய்வத்தின் சாட்சியாக சபதம் எடுத்துள்ளனர். இப்படியாக இடஒதுக்கீட்டுக்கு எதிரான குரல் இணையதளத்திலும், களத்திலும் வலுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சிஜேபி போல் இன்னமும் இந்த இயக்கம் ஓரணியாகத் திரளவில்லை. இந்தச் சூழலில், டெல்லி ஜந்தர் மந்தரில் இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தை தொடங்கி, அதற்குத் தலைமையேற்கக் காத்துக் கொண்டிருக்கிறார் ஹர்ஷ் துபே. அவருக்கு கல்வியாளர் ஆனந்த் ரங்கநாதன், பத்திரிகையாளர் அஜீத் பார்தி, எழுத்தாளர் – இயக்குநர் அனுராதா திவாரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோரிக்கை என்ன? சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் இவர்களின் பிரதானக் கோரிக்கை. கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும், இன்னும் பிற சூழல்களிலும் தங்களின் உரிமை பறிபோகிறது என்கின்றனர் அவர்கள். சில வாரங்களுக்கு முன்னர் யுஜிசி விதிமுறைகள் 2026-ன் கீழ் உயர் கல்வி நிறுவனங்களில் கொண்டுவரப்பட்ட புதிய சமத்துவ விதிமுறைகளை (UGC equity regulations) எதிர்த்து போராட்டங்கள் நடந்தது நினைவிருக்கலாம். உயர் சாதியினர் இந்த விதிமுறை அநியாயமானது, உயர் சாதியினரை திட்டமிட்ட குறிவைக்கக் கூடியது, கருப்புச் சட்டம் என்றெல்லாம் வெகுண்டெழுந்தனர். உத்தரப் பிரதேசத்தின் அலிகர், சம்பல், குஷிநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர் அமைப்பினர் புதிய யுஜிசி விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை உடனடியாக திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி மாதம் யுஜிசியின், புதிய விதிமுறைகளுக்கு (Promotion of Equity in Higher Education Institutions) உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இப்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் அமைப்பினரும், யுஜிசி விதிமுறைகளை நிரந்தரமாகத் திரும்பப் பெற வேண்டும் என்கின்றனர்.