
மும்பை, ஆக. 9- இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மேட்ச் ரெப்ரீ 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்க இருந்த நிலையில், அஜின்கியா ரஹானே தனது செயலால் அதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார். இருவரும் துலீப் டிராபியில் ஆடிய போது நடந்த அந்த சம்பவத்தை ரஹானே ஒரு பேட்டியில் பகிர்ந்தார். கடந்த 2022ம் ஆண்டு வெஸ்ட் ஜோன் மற்றும் சவுத் ஜோன் அணிகளுக்கு இடையே துலீப் டிராபி இறுதிப்போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் வெஸ்ட் ஜோன் அணியின் கேப்டனாக அஜின்கியா ரஹானே செயல்பட்டார். அந்த ஆட்டத்தின் போது, சவுத் ஜோன் அணியின் பேட்ஸ்மேன் ரவி தேஜாவை, வெஸ்ட் ஜோன் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்ந்து வம்புக்கு இழுத்து வந்தார். ஆட்டத்தின் 50வது ஓவரில் இருவருக்கு இடையேயான இந்த வாக்குவாதம் எல்லை மீறியது. அம்பயர்கள் எச்சரித்த பிறகும் ஜெய்ஸ்வால் தனது கோபத்தைக் கட்டுப்படுத்தாமல் மீண்டும் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் சூழ்நிலை மோசமடைவதை உணர்ந்த கேப்டன் ரஹானே, உடனடியாக தலையிட்டு சொந்த அணி வீரரான ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார். கேப்டனின் இந்த அதிரடி முடிவால் ஜெய்ஸ்வால் கோபத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் ரஹானே கூறுகையில், “அப்போது போட்டி நடுவராக இருந்த வெங்கலில் நாராயணன் குட்டி, ஜெய்ஸ்வாலுக்கு 4 போட்டிகளில் ஆட தடை விதித்து கடிதம் தயார் செய்து வைத்திருந்தார். ஆனால், ஒரு கேப்டனாக நான் எடுத்த இந்த ஒழுங்கு நடவடிக்கையைப் பார்த்த நடுவர், அந்த கடிதத்தை என் கண் எதிரிலேயே கிழித்துப் போட்டார். அப்போது தடை விதித்து இருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். ஒரு வீரரின் வாய்ப்புகள் அத்துடன் முடிவுக்கு வந்திருக்கலாம்.” என்று விவரித்தார். அப்போது தடை விதிக்கப்பட்டிருந்தால் ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் பயணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். அவரை மும்பை அணியில் சில காலம் தேர்வு செய்யாமலும் போயிருக்கலாம். ஆனால், ரஹானேவின் இந்த முதிர்ச்சியான முடிவால் ஜெய்ஸ்வால் தடையிலிருந்து தப்பி, இன்று இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வருகிறார்.
















