
பெங்களூரு: ஆக. 9-
பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் கூட்டுறவு வங்கி மேலாளர் உட்பட சிலர் சேர்ந்து ரூ.18.41 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி.) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பெங்களூரு ஜெயநகரைச் சேர்ந்தவர் நவீன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பனசங்கரியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் 7 கணக்குகளை வைத்துள்ளார். இந்த நிலையில், வங்கி மேலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, அவரது கூட்டாளிகளான ஹரீஷ், சச்சின் மற்றும் சில வங்கி அதிகாரிகள் இணைந்து நவீனிடம் தற்காலிக ஓவர் டிராஃப்ட் கடன் தருவதாகக் கூறியுள்ளனர்.இதற்காக நவீனின் சொத்து ஆவணங்களை அடமானமாகப் பெற்றுக் கொண்டு கடனை ஒப்புதல் செய்துள்ளனர். ஆனால், அந்த கடன் தொகையை தங்களது வசதிக்கு ஏற்ப அவர்கள் குறிப்பிட்ட சில கணக்குகளுக்கு மாற்றுமாறு நவீனை வற்புறுத்தியுள்ளனர். அத்துடன் அதற்குரிய வட்டியையும் நவீனிடமே வசூலித்துள்ளனர்.இதற்கு நவீன் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரது வங்கி கணக்குகளை முடக்கி விடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர், நவீனுக்குத் தெரியாமலேயே அவரது கணக்கில் இருந்த ரூ.18.41 கோடி பணத்தை வேறு கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நவீன், இதுகுறித்து சி.சி.பி. போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வங்கி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













