Home மாவட்டங்கள் பெங்களூர் சிகரெட்டால் சுட்டு கொடூரம்! தர்ஷன் மீது சாட்சி பிரதோஷ் திடுக்கிடும் புகார்

சிகரெட்டால் சுட்டு கொடூரம்! தர்ஷன் மீது சாட்சி பிரதோஷ் திடுக்கிடும் புகார்

பெங்களூரு: ஆக. 9-
பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகாசாமி கொலை வழக்கில், 14-வது குற்றவாளியான பிரதோஷ் நீதிமன்றத்தில் மன்னிப்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்திய கொடூரக் கொலையின் அத்தனை விவரங்களையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
பிரதோஷ் நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், “இந்தக் கொலையில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. ‘வேண்டாம் சார், அடிக்காதீங்க’ என நான் எவ்வளவோ கெஞ்சியும் தர்ஷனும் அவரது ஆட்களும் கேட்கவில்லை. ரேணுகாசாமியை சிகரெட்டால் சுட்டும், கொடூரமாக தாக்கியும் சித்ரவதை செய்தனர். தர்ஷன் நேரடியாகவே அவரையடித்து துன்புறுத்தினார்.
ரேணுகாசாமியின் போனை சோதித்தபோது, அவர் பவித்ரா கவுடாவுக்கு மட்டுமின்றி மேலும் 3 பெண்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த தர்ஷன் கும்பல், தாக்குதலின் கொடூரத்தை அதிகப்படுத்தியது.
படுகாயமடைந்து துடித்த ரேணுகாசாமிக்கு நான்தான் தனியாகச் சென்று சாப்பாடும் தண்ணீரும் கொடுத்தேன். ஆனால் ரேணுகாசாமி இறந்துவிட்டதாக டிரைவர் ரவிசங்கர் கூறியதும் தர்ஷன் பதறிப்போனார். ‘நான் தப்பிக்க உதவி செய்யாவிட்டால், என்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு செத்துவிடுவேன்’ எனத் தர்ஷன் மிரட்டினார். அந்தப் பயத்தில்தான் சடலத்தை மறைக்கவும் வழக்கை மூடி மறைக்கவும் உதவினேன். ஜெயிலுக்குச் சென்ற பிறகும் தர்ஷன் எங்களை சும்மா விடவில்லை. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்தார். நடந்த உண்மைகள் அனைத்தையும் சொல்லத் தயாராக இருக்கிறேன், எனக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.கிரிநகரில் வசிக்கும் பிரதோஷ், அடிப்படையில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியபோதிலும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் தர்ஷனின் ‘பிருந்தாவனா’, ‘புல்புல்’ படங்களில் நடித்தவர். கொலைக்குப் பிறகு தர்ஷன் பெயரைக் காப்பாற்ற முயன்ற பிரதோஷிற்கு, தர்ஷன் 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பிரதோஷ் வீட்டில் சோதனையிட்ட போலீசார், அந்த 30 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.