
பெங்களூரு: ஆக. 9- தம்பதியருக்கு இடையே கணவன்-மனைவி பொருத்தம் இல்லாததையோ, கருத்து வேறுபாட்டையோ அல்லது தாம்பத்ய உறவு இல்லாததையோ ‘கொடுமை’ எனக் கூறி குற்றவியல் வழக்காக மாற்ற சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
மைசூரைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா, அந்த அதிகாரிக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
மனுதாரரான கணவர் மற்றும் புகார் அளித்த மனைவி ஆகிய இருவருமே காவல் துறை அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள். 2023-ல் திருமணமான இவர்கள், நான்கு மாதங்களிலேயே பிரிந்தனர். தனது கணவர் தன்னுடன் உடலுறவு கொள்ளவில்லை என்றும், திருமண வாழ்வை முழுமையாக்கவில்லை என்றும் கூறி மனைவி புகார் அளித்தார். இதன் பேரில் கணவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 498A (குடும்ப வன்கொடுமை), 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ஆதாரமற்ற இந்த குற்றவியல் வழக்கு அதிகாரியின் வேலைக்கும், பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும். இது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும்” எனக் கூறி வழக்கை ரத்து செய்தது.













