
சென்னை: ஆக. 19-
லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு, மீட்டுக் கொண்டு வந்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 1957 முதல் 1967-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையும் காளிங்க நர்த்தனர் கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் தேவியின் உலோகச் சிலைகளும் திருடு போயின. இது தொடர்பாக தமிழக சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. திருமங்கை ஆழ்வார் சிலையின் பூர்வீகம் குறித்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும், புகைப்பட சான்றுகளையும் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திரட்டினர்.
இந்த ஆதாரங்கள் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை மூலமாக இங்கிலாந்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஏற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சிலையை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதித்தது. இதையடுத்து தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கடந்த 16-ம் தேதி இச்சிலை தமிழகத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டது.
தலைமைச் செயலகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் காவல்துறை இயக்குநர் (சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு) டி.கல்பனா நாயக் ஆகியோர் மீட்கப்பட்ட சிலையை நேற்று முன்தினம் முதல்வர் விஜய்யிடம் காண்பித்தனர். அரிய கலைப் படைப்பை மீட்டுக் கொண்டு வந்த அதிகாரிகளின் சிறப்பான பணியை முதல்வர் பாராட்டினார். அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
மீட்கப்பட்டுள்ள திருமங்கை ஆழ்வார் சிலை நேற்று மாலை கும்பகோணம் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அஸ்வினி, செயல் அலுவலர் சுரேந்திர ராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து கிராம மக்கள் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் அந்த சிலை கோயிலின் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டப்பட்டது.













