Home மாவட்டங்கள் பெங்களூர் ரேணுகாசுவாமி கொலை: தாய் சாட்சியம் பெற அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி

ரேணுகாசுவாமி கொலை: தாய் சாட்சியம் பெற அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி

பெங்களூரு, ஆக. 19-
கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சித்ரதுர்கா ரேணுகாசுவாமி கொலை வழக்கில், பலியான ரேணுகாசுவாமியின் தாயார் ரத்னபிரபாவை மீண்டும் ‘குறுக்கு விசாரணை’ நடத்த அனுமதி கோரி அரசு தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு, 2024 ஜூன் 8-ஆம் தேதி ரேணுகாசுவாமி தனது தாயாரை செல்போனில் அழைத்து பேசியதாக புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விசாரணையின் போது தாயார் ரத்னபிரபா ‘எனக்கு அதுபோல எந்த அழைப்பும் வரவில்லை’ என்று சாட்சியம் அளித்தார். இதனால் அவர் அரசுத் தரப்பிற்கு எதிராக மாறிவிட்டதாகக் கூறி (பிறழ் சாட்சி), அவரை மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை நீதிமன்றம் இந்த மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதை எதிர்த்து அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சாட்சி ஒருவர் தவறுதலாகவோ அல்லது கவனக்குறைவாகவோ அளிக்கும் சிறிய முரண்பாடான பதில்களை ‘எதிரான சாட்சியம்’ என்று கருத முடியாது என்று சுட்டிக்காட்டியது. மேலும், இந்திய சாட்சியச் சட்டத்தின் கீழ் சொந்த சாட்சியை குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இருந்தாலும், அது அரிதிலும் அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், சாட்சியத்தில் சிறிய முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியது. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, அரசுத் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.