
புதுடில்லி, ஆகஸ்ட் 19- ‘’பொதுத்துறை வங்கிகள் இளைஞர்களுடன் நீண்ட காலம் தங்களது வங்கிகளை அணுகும் வகையில் உறவை வளர்த்து கொள்ள வேண்டும்; இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்’’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.டில்லியில் நடந்த இரண்டு நாள் பொதுத்துறை வங்கி மாநாட்டின் நிறைவு விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பொதுத்துறை வங்கிகள் ஜென்-சி தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் எளிய, நவீன மற்றும் 24 மணி நேர டிஜிட்டல் சேவைகளை வழங்க வேண்டும். அக்டோபர் 2 முதல் ஒரு மாத காலத்திற்கு ‘இளைஞர்களுக்கான வங்கிச் சேவை’ என்ற பிரசாரத்தை அரசு வங்கிகள் மேற்கொள்ள வேண்டும். பொதுத்துறை வங்கிகள் இளைஞர்களுடன் நீண்ட காலம் தங்களது வங்கிகளை அணுகும் வகையில் உறவை வளர்த்து கொள்ள வேண்டும். இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும். ஸ்மார்ட் போன்களுடன் வளர்ந்த இளைஞர்களுக்கு எளிமையான, நவீன முறையிலான வங்கி சேவைகள் தேவைப்படுவதை உணர வேண்டும்; வங்கி கிளைகளுக்கு வருபவர்களுக்காகக் காத்திராமல், கல்லூரிகள் மற்றும் கல்வி வளாகங்கள் மூலமாக இளைஞர்களைச் சென்றடைய வேண்டும்.













