
புதுடெல்லி, ஆகஸ்ட் 19- வினாத்தாள் கசிவு வழக்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், “வினாத்தாள் கசிவு வழக்குகளில் குற்றம்சாட்டப்படுவோருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் பினாமி சொத்து தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்த வேண்டும். குற்றவாளிகள், அவர்களது உறவினர்களின் சொத்து களை முடக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாய் கூறியதாவது: வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடுவோரின் சொத்துகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துகளையும் முழுமையாக மதிப்பீடு செய்து ஊழல் தடுப்பு, பணமோசடி தடுப்பு, பினாமி சொத்து தடுப்பு மற்றும் கறுப்புப் பணம் தொடர்பான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயித்து புலன் விசாரணை, வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவிட வேண்டும். வினாத்தாள் கசிவு குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அஸ்வினி குமார் வாதிட்டார்.













