Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்காவுக்கு ‘குட்பை’ சொல்லும் வளைகுடா நாடுகள்?

அமெரிக்காவுக்கு ‘குட்பை’ சொல்லும் வளைகுடா நாடுகள்?

வாஷிங்டன், ஆக. 22- வளைகுடா நாடுகளில் பல ஆண்டுகளாக ஆழமாகப் பதிந்திருந்த அமெரிக்காவின் அசைக்க முடியாத சுவடுகள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கிவிட்டன. “அமெரிக்காவே எங்களின் பாதுகாப்பு கவசம்” என்று சரணாகதியில் இருந்த வளைகுடா நாடுகள் இன்று அதிபர் ட்ரம்பின் ‘ராஜதந்திர’ நடவடிக்கைகளாலும் முரண்பட்ட பேச்சுகளாலும் பெரும் பொருளாதார மற்றும் உயிரழப்புகளைத் தாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஒருபுறம் ஈரான் அச்சுறுத்தல், மறுபுறம் ஹார்முஸ் நீரிணைப் பாதை மூடப்பட்டதால் செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் தாக்குதல் என வளைகுடா அரசுகளும், அவற்றின் தொழில் துறையும் தவிக்கின்றன. “அமெரிக்காவை நம்பி இனி பயனில்லை” எனக் கருதி, வளைகுடா நாடுகள் இப்போது மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கிவிட்டன. அமெரிக்க ராணுவத் தளங்களை நம்பியிருந்த காலம் போய் சீனா, ரஷ்யா மற்றும் புதிய பிராந்திய ஒப்பந்தங்களை நோக்கி வளைகுடா நாடுகள் நகரத் தொடங்கியுள்ளன. வளைகுடா நாடுகள் விரும்பாத போர்: ஈரானுடன் அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியாமல் பல மாதங்களாக நீடிக்கிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் சப்ளையும் கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. உண்மையில், ஈரான் மீது அமெரிக்கா தொடுத்த இந்தப் போரை மேற்காசியாவில் உள்ள சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கதார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் விரும்பவில்லை. அமெரிக்கா போரைத் தொடங்கிவிட்டு, அதை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் திணறுவதைப் பார்த்தும், அதிபர் ட்ரம்ப்பின் முரணான பேச்சுகளாலும் இந்த ஐந்து நாடுகளும் வெறுப்பின் உச்சத்தில் உள்ளன என்று ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. “அமெரிக்காவின் ராணுவப் படையைத் தங்கள் நாட்டில் தங்கவைக்க ஏன் அனுமதியளித்தோம்?” என்று இந்த ஐந்து நாடுகளும் தங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்பிக்கொண்டுள்ளன. வளைகுடா நாடுகள் கூட்டணியின் முக்கிய அதிகாரி ஒருவர், “அதிபர் ட்ரம்ப் போரைத் தொடங்கினார். ஆனால், அதற்கான விலையை நாங்கள் கொடுக்கிறோம்” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.