Home செய்திகள் தேசிய செய்திகள் தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு

தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு

புதுடெல்லி, ஆக. 22- தி.மு.க., – எம்.பி., தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், தொலைத்தொடர்பு செயலரை எதிர் தரப்பு சாட்சியாக அழைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், கடந்த 2004 – 07 வரை தி.மு.க.,வை சேர்ந்த தயாநிதி, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அரசுக்கு நிதி இழப்பு அந்த காலக்கட்டத்தில், தன் அதிகாரத்தை துஷ்பிர யோகம் செய்து பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அதிவிரைவு தொலைபேசி இணைப்புகளைத் தன் சகோதரர் கலாநிதியின், ‘சன் நெட்வொர்க்’ நிறுவன வர்த்தகப் பயன்பாட்டிற்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.இந்த சட்டவிரோத இணைப்புகள் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி, கலாநிதி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தயாநிதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘கடந்த 2004- – 07 காலக்கட்டத்தில், ஒரு அமைச்சருக்கு அனுமதிக்கப்படும் தொலைத்தொடர்பு வசதிகளின் வரம்புகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளைத் தெளிவுப்படுத்த அதிகாரிகளின் சாட்சியம் முக்கியமானது.உத்தரவு ‘பி.எஸ்.என்.எல்., மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலரின் சாட்சியம் அவசியம்’ எனக் கூறி, அவரை நீதிமன்ற சாட்சியாக சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கு நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தயாநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுாத்ரா, மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலரை எதிர் தரப்பு சாட்சியாக ஆஜராக அனுமதிக்கக் கூடாது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது போல, அவரை நீதிமன்ற சாட்சியாகவே ஆஜராக அறிவுறுத்த வேண்டும்’ என, வாதிட்டார்.
சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, ‘’தொலைத்தொடர்பு செயலரை நீதிமன்ற சாட்சியாக அழைக்க பிறப்பித்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதேவேளையில், அவரைத் தயாநிதி தரப்பு எதிர் தரப்பு சாட்சியாக அழைப்பதில் சி.பி.ஐ-.,க்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,’’ என, தெரிவித்தார்.