
பெங்களூரு: ஆக. 22-
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் ஒரு நிமிடம் கூட முடங்காமல், 24 மணி நேரமும் சீராக இயங்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த வி.ஷைலஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் மறுக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் அடங்கிய தனி நீதிபதி அமர்வு விசாரித்தது.
வைட்ஃபீல்டு போலீஸ் நிலையத்தில் எழுந்த அத்துமீறல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், கடந்த 11 மாதங்களாக சிசிடிவி இயங்கவில்லை என்ற காவல்துறையின் பதிலை நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இது காவல் துறையின் நம்பகத்தன்மையையே சீர்குலைக்கும் செயல் என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
பல்வேறு போலீஸ் நிலையங்களில் சிசிடிவி மற்றும் யுபிஎஸ் வசதிகளை ஆய்வு செய்தபோது, மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்களில் கேமராக்கள் செயலிழப்பது தெரியவந்துள்ளது. 365 நாட்களும் சிசிடிவி இயங்காவிட்டால், அதை அமைத்ததன் நோக்கமே வீணாகிவிடும் என்று பீடம் சுட்டிக்காட்டியது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இயங்குவதை உயர் அதிகாரிகள் நேரலையாக கண்காணிக்க வேண்டும். உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் மற்றும் மாநில டிஜிபி ஆகியோர் உச்சநீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த இடைக்கால வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.













