
பெங்களூரு: ஆக. 22:
அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து மேலவையில் பேசிய முதலமைச்சர் டி.கே.சிவகுமார், “சபையின் விதிகளின்படி நோட்டீஸ் கொடுங்கள். விவாதம் செய்யாமல் ராஜினாமா கேட்பது சரியல்ல. இரண்டு நாட்கள் விவாதம் செய்வோம். அப்படியும் உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் போராட்டத்தை தொடருங்கள்” என்று தெரிவித்தார்.
நாகேந்திரா ராஜினாமாவை வலியுறுத்தி 5-வது நாளாக வெள்ளிக்கிழமையும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்தது. சபை நடவடிக்கைகள் சீராக நடக்க ஒத்துழைக்குமாறு சபாநாயகரும், ஆளும் கட்சியினரும் கோரிக்கை விடுத்தும், அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய முதல்வர், “ஜனநாயக அமைப்பில் போராட்டம் நடத்த உரிமை உண்டு. நாகேந்திரா மீது முன்பு குற்றச்சாட்டு எழுந்தபோது அவரை ராஜினாமா செய்ய வைத்தேன். இப்போது மீண்டும் அவரை ஏன் அமைச்சரவையில் சேர்த்தோம் என்பதை விளக்குகிறேன். அதற்கு விதிகளின்படி நோட்டீஸ் கொடுத்து 2 நாட்கள் விவாதம் செய்யுங்கள். அப்படியும் திருப்தி இல்லையென்றால் போராடுங்கள்” என்றார். இடையில் குறுக்கிட்ட பா.ஜ.க. உறுப்பினர், “ஊழல் நடந்துள்ளதை முன்னாள் முதல்வர் சபையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதில் என்ன குழப்பம்? விவாதிப்பதற்கு எதுவும் இல்லை, ராஜினாமா செய்யவையுங்கள்” என்று வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, “நாங்கள் நாகேந்திராவை தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் மட்டுமே கிடைத்துள்ளது, அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்படவில்லை. எஸ்.ஐ.டி.யின் செயல்பாட்டை அனைவரும் அறிவர். வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த வேறு மூன்று பேரை அமைச்சராக்குங்கள், எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் கறைபடிந்த அமைச்சரை சேர்க்கக்கூடாது. முதலில் அவரை ராஜினாமா செய்ய வையுங்கள்” என்று பிடிவாதம் பிடித்தார். இதனால் ஆளும்-எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே வாக்குவாதம் முற்றவே, சபாநாயகர் சலீம் அகமது அவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார். முன்னதாக சபை தொடங்கியதும் சபாநாயகர் சலீம் அகமது, “5 நாட்களாக சபை சரியாக நடக்கவில்லை. இது ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளது. சபை சீராக நடக்க ஒத்துழைக்கவும்” எனக் கோரினார். வால்மீகி வளர்ச்சி கழக நிதி முறைகேடு தொடர்பாகவே நாகேந்திரா ராஜினாமா செய்தார். அவருக்கு ஜாமீன் கிடைத்தது தவிர வேறு மாற்றம் எதுவும் இல்லை. அதனால் அவர் ராஜினாமா செய்யும் வரை போராட்டத்தை திரும்பப் பெறமாட்டோம் என்று எதிர்க்கட்சியினர் தெளிவுபடுத்தினர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர், “ராஜினாமா குறித்து சபையில் விவாதியுங்கள். போராட்டம் நடத்துவது சரியல்ல. ஆளுநர் தான் பதவிப்பிரமாணத்திற்கு அனுமதி அளித்துள்ளார்” என்றார். போராட்டம் கைவிடப்படாததால், அமளிக்கு நடுவே கேள்வி-பதில் நேரம் நடைபெற்றது. “ஏழை மக்களின் பணம் கோவிந்தா… கோவிந்தா…” என கோஷமிட்டும், பாடல்கள் பாடியும் எதிர்க்கட்சியினர் அரசுக்கு அழுத்தம் தந்தனர். மேலும் ‘கோப்பில் 187 கோடி ரூபாய் லூட்டி அடிக்கப்பட்டுள்ளது’ என்ற பதாகைகளையும் காட்டினர். பதாகை காட்டுவது விதிமீறல் என சபாநாயகர் கூறியதற்கு, “இது பதாகை அல்ல, கோப்பில் உள்ள காகிதம்தான்” என பா.ஜ.க.வினர் நியாயப்படுத்தினர். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் அவசரத்தில் தலித் மக்களை அவமதித்ததாக அமைச்சர் விஜயானந்த் காஷப்பனவர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியது. செய்தியாளர் சந்திப்பில் பிரதமரை விமர்சிக்க போய் தலித்துகளை அவமானப்படுத்திவிட்டதாக கூறிய பா.ஜ.க., அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும் கட்சியினர், மல்லிகார்ஜுன கார்கே பேசிய இடத்தை தூய்மைப்படுத்தி அவமதிப்பு செய்த பா.ஜ.க.வுக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.













