Home தலைப்பு செய்தி கர்நாடகத்திற்கு மேலும்15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவு

கர்நாடகத்திற்கு மேலும்15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவு

புதுடெல்லி ஆகஸ்ட் 24-தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்து விடுமாறு காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லியில் இன்று நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் கர்நாடக அரசுக்கு மீண்டும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடக அணைகளில் இருந்து பிலிகுண்டுலுவுக்கு மொத்தம் 11.66 டி.எம்.சி. நீர் சென்றடைவதை கர்நாடக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். முன்னதாக முதல் முறையில் 3,000 கனஅடியும், இரண்டாவது முறையில் 12,000 கனஅடியும் நீர் திறக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 9,000 கனஅடி நீர் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் கர்நாடக தரப்பில், குடிநீர்த் தேவைக்காக 38 டி.எம்.சி.யும், சுற்றுச்சூழல் தேவைக்காக 10 டி.எம்.சி.யும் நீரைச் சேமிப்பது அவசியம் என்றும், மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் வடகிழக்கு பருவமழையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. மேலும், பற்றாக்குறை சுமையை இரு மாநிலங்களும் சமமாகப் பகிர வேண்டும் எனக் கூறி, 12,000 கனஅடிக்கு பதிலாக தினமும் 6,000 கனஅடியாகக் குறைத்து ஆகஸ்ட் 27 வரை மட்டுமே நீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தமிழக தரப்பில், நிலுவையில் உள்ள 17.49 டி.எம்.சி. நீரை கர்நாடகா உடனடியாக திறந்து விட வேண்டும் என்றும், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து பிலிகுண்டுலுவுக்கு உரிய நீரைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழகம் சார்பில் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 7 வரையிலான 15 நாட்களில் நிலுவை மற்றும் வழக்கமான பங்கு உட்பட மொத்தம் 28.386 டி.எம்.சி. நீர் பிலிகுண்டுலுவை சென்றடைய வேண்டும் என்றும், வறட்சி காலத்திலும் தமிழகத்திற்கான உரிமையுள்ள காவிரி நீர் கிடைக்க வேண்டும் என்றும் உறுதியாகக் கோரப்பட்டது.