
புதுடெல்லி: ஆக. 24:
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பாக நாளை நடைபெறவுள்ள சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று பெய்ஜிங் செல்கிறார்.
இந்தியா–சீனா இடையிலான 3,488 கி.மீ. நீள எல்லையை உள்ளடக்கிய சிக்கலான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, இருதரப்பு சிறப்புப் பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என 2003-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதன்படி அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்தியா சார்பில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீனா சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங்-யீயும் சிறப்புப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எல்லைப் பிரச்சினை தொடர்பான சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று சீனா செல்கிறார். சீனாவின் சிறப்புப் பிரதிநிதி வாங்-யீயுடன், அஜித் தோவல் நாளை 25-வது சுற்று பேச்சுவார்த்தையை நடத்த உள்ளார்.எல்லைப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காண முடியவில்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் பல்வேறு பதற்றங்களைச் சமாளிக்க இந்தப் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்கும் என இருதரப்பு அதிகாரிகளும் கருதுகின்றனர்.வரும் செப்.12, 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.













