
பெங்களூரு: ஆக. 24:
வால்கீமி வளர்ச்சி கழக நிதி ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரத்தில், அமைச்சர் பி.நாகேந்திரா உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெங்களூரில் எதிர்க்கட்சியான பாஜக கடும் போராட்டத்தில் ஈடுபட்டது. சட்டசபையின் 7 நாள் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் ஏற்கனவே பலியான நிலையில், 8-வது நாளான இன்று போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
அமைச்சர் நாகேந்திரா ராஜினாமாவை வலியுறுத்தி பாஜக தலைவர்கள் 3 தனித்தனி குழுக்களாகப் பிரிந்து, ஒரே நேரத்தில் விதான சவுதாவை முற்றுகையிட ரகசிய திட்டம் தீட்டியிருந்தனர். மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசுவாமி தலைமையில் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஃப்ரீடம் பார்க் பகுதியில் திரண்டு தீவிர தர்ணா போராட்டம் நடத்தினர். மற்றொருபுறம் சி.டி.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தலைமையில் இரண்டு தனிக்குழுக்கள் விதான சவுதாவின் முக்கிய நுழைவு வாயில்கள் வழியாக திடீரென உள்ளே நுழைய முயன்றன.
விதான சவுதாவை நோக்கி ஆவேசமாக பாய்ந்து செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், பி.ஒய்.விஜயேந்திரா, சி.டி.ரவி, என்.ரவிகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் பாஜக தொண்டர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே கடும் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அனைவரையும் அதிரடியாக கைது செய்த போலீசார், அங்கிருந்த BMTC பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

கர்நாடக அமைச்சர் நாகேந்திராவின் ராஜினாமாவைக் கோரி விதான சவுதாவை முற்றுகையிட முயன்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம் தீவிரமடையும் என்பதை முன்கூட்டியே கணித்த நகர போலீசார், அசம்பாவிதங்களைத் தவிர்க்க விதான சவுதா மற்றும் ஃப்ரீடம் பார்க் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மெட்ரோ நிலையம் மற்றும் விதான சவுதாவின் ‘இ’ மற்றும் ‘எஃப்’ நுழைவு வாயில்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டன.
இந்த முற்றுகை போராட்டத்தால் விதான சவுதாவை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக எம்.எல்.ஏ-க்கள் நுழையும் வாயில் பகுதியில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். ஃப்ரீடம் பார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்ட பெங்களூரின் பல்வேறு தொகுதி பாஜக நிர்வாகிகளையும் போலீசார் மொத்தமாக கைது செய்து நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.













