Home மாவட்டங்கள் பெங்களூர் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை, செப். 2-
தமிழகத்தில் விக்கிரவாண்டி உள்ளிட்ட 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 6,600 கி.மீ. நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றின் வழியாக தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், பயணிகள் வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக தமிழகத்தில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. அதன்படி, பாளையம், கோட்டகவுண்டம்பட்டி, ராசம்பாளையம், விக்கிரவாண்டி, மேட்டுப்பட்டி, நாதன்கரை, வீரசோழபுரம், பொன்னம்பலப்பட்டி, திருப்பராய்த்துறை, மணவாசி, செங்குறிச்சி,
திருமாந்துறை, சமயபுரம், வேலஞ்செட்டியூர், கொழிஞ்சிபட்டி உள்ளிட்ட 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
வாகனங்களின் வகைக்கு ஏற்ப சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது.தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் முருகன் வெங்கடாசலம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 30 சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்துள்ள போதிலும், சாலை மேம்பாடு மற்றும் விரிவாக்கப் பணிகளை காரணம் காட்டி தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார்.