
ராமேசுவரம்: செப். 2-
கொழும்பு துறைமுகத்தில் ரூ.500 கோடி சர்வதேச மதிப்பிலான 420 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொழும்பு துறைமுகத்துக்கு கண்டெய்னர் மூலம் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய கண்டெய்னர் ஒன்றை சோதனையிட்டதில், அதில் 420 கிலோ ஐஸ் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட டவல்களுக்குள் ஐஸ் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், இந்த போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் கண்டெய்னரில் கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இலங்கையின் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த போதைப்பொருள் கடத்தலின் பின்னணி மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.













