
புது தில்லி, செப். 2- நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் போது, மாணவர் அமைப்பினர் மற்றும் பங்கேற்பாளர்கள் மீது பதியப்பட்ட அனைத்து முதன்மை தகவல் அறிக்கைகளையும் (FIR) ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப்பயன்படுத்தி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை நீதிமன்றம் எடுத்துள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், அவர்கள் மீது பதியப்பட்ட குற்றவியல் வழக்குகளால் அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஜூலை 20 முதல் ஜூலை 25 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக பதியப்பட்ட அனைத்து வழக்குகளும், நீதிமன்றத்தின் முன் வராத வழக்குகள் உட்பட, இனிமேல் தொடரப்படாது அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இதே விவகாரம் தொடர்பாக இனி எவ்வித புதிய வழக்குகளும் பதியப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவில் ஒரு முக்கியமான விதிவிலக்கையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. தில்லி காவல்துறையின் தரவுகளின்படி, போராட்டத்தின் போது அடையாளம் காணப்பட்ட 2,873 நபர்கள் மீது மட்டும் சட்டப்படி விசாரணை தொடரும்.இவர்கள் மீது கொலை, கொள்ளை போன்ற கடுமையான குற்றப் பின்னணிகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது தேவைப்பட்டால் சட்டப்படி புதிய வழக்குகள் பதியப்படலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இந்த உத்தரவின் மற்றொரு முக்கிய அம்சமாக, நீட் தேர்வு விவகாரத்தில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மூன்று மாத கால அவகாசத்தை மத்திய அரசுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது. இத்தகைய துயரமான நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உறுதியளித்தபடி இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.













