Home செய்திகள் தேசிய செய்திகள் பயங்கரவாதத்தை கூண்டோடு அழிப்போம் – பிரதமர் மோடி ஆவேச பேச்சு

பயங்கரவாதத்தை கூண்டோடு அழிப்போம் – பிரதமர் மோடி ஆவேச பேச்சு

புதுடில்லி, செப். 2- ‘’பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, ஆட்சேர்ப்பு மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் நாம் ஒன்றிணைந்து அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்பதை அனைத்து நாடுகளும் ஒரே குரலில் தெரிவிக்க வேண்டும்,’’ என, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமரை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பேசினார். எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001ம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் துவங்கப்பட்டது. கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் இணைந்து இதை உருவாக்கின. பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்கொண்டு, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது இதன் முக்கிய நோக்கமாகும். தற்போது 10 நாடுகள் முழு உறுப்பினர்களாக உள்ளன. 2017 முதல் இந்தியாவும் இணைந்தது. இந்நிலையில், 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று நடந்தது. அமைப்பு துவங்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி இந்த மாநாடு நடக்கிறது. ‘நிலையான அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக ஒன்றிணைந்து பயணிப்போம்’ என்பது இந்த ஆண்டு மாநாட்டின் மையக்கருத்தாக உள்ளது. மாநாட்டு அரங்கிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பிற நாட்டு தலைவர்கள் வரவேற்றனர். சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருடன் பிரதமர் மோடி உற்சாகமாக கைகுலுக்கி பேசினர். பயங்கரவாதம், உலக மோதல்கள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி, மாநாட்டில் பேசினார். அவர் மேலும் பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, ஆட்சேர்ப்பு மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் நாம் அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்பதை அனைத்து நாடுகளும் ஒரே குரலில் தெரிவிக்க வேண்டும்.உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். எந்த பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது. அனைத்து போர்களும், மோதல்களும் பேச்சு மற்றும் துாதரக நடவடிக்கைகள் வாயிலாக தீர்க்கப்பட வேண்டும்.