
காத்மாண்டு: செப்டம்பர் 4-
நுவாகோட் மாவட்டத்தில் உள்ள தேவிகாட் என்ற ஆற்றங்கரை நகரத்தில் அமைந்திருந்த முதியோர் பராமரிப்பு இல்லம் பெருவெள்ளத்தால் மொத்தமாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் வருவதற்குள் சிலர் உயரமான பகுதிகளுக்கு சென்று தப்பினார்கள். ஆனால், 7 முதியவர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உள்ளூர் தன்னார்வலர்கள், 91 வயதான குணா மாயா போஹரா என்ற மூதாட்டியை இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டனர்.
குணா மாயா சேறு படிந்த நிலையில் ஜேசிபி இயந்திரத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. பெரும் துயரத்தில் போராடி உயிர் பிழைத்தவர் நம்பிக்கையின் சின்னமாக மாறினார்.
மீட்கப்பட்ட குணா மாயா மற்றும் பலர் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.குணா மாயா, “வெள்ளம் வந்தபோது நான் தரைத்தளத்தில் இருந்தேன்.
ஏற்கனவே கால் ஊனம் இருந்த நிலையில், கைகளில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும், மரணத்தை எதிர்த்து போராடி உயிர் வாழ வேண்டும் என்ற மன உறுதியுடன் இருக்கிறேன். ஜன்னலைத் திறந்து, தலையை நீர் மட்டத்திற்கு மேலே வைத்தேன். 2-3 மணி நேரம் அவ்வாறே இருந்தேன். பின்னர் உள்ளூர் தன்னார்வலர்கள் வந்து என்னை மீட்டனர்,” என்று கூறினார்.














