
சென்னை, செப். 6: இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கான ஆர்வம் முகமது ஷமியின் உள்ளத்தில் இன்னும் உள்ளது என்று கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் தெரிவித்தார். துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இன்று கிழக்கு மண்டலம் மற்றும் தென் மண்டலம் அணிகள் சென்னையில் மோதுகின்றன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கு மண்டலம் அணியை இறுதிப் போட்டியில் கொண்டுவருவதில் முகமது ஷமி முக்கிய பங்காற்றியுள்ளார். மத்திய மண்டலம் அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியிலும் அவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஷான் கிஷன் கூறியதாவது, “முகமது ஷமி, விளையாட்டின் ஜாம்பவானாக விளங்குகிறார். பெங்கால் அணிக்காக விளையாடத் தொடங்கியதிலிருந்து அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். இந்திய அணிக்காகவும் அவர் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். வயது என்பது வெறும் எண் மட்டுமே என்று நான் கருதுகிறேன். மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்ற வேட்கையை முகமது ஷமியிடம் காண முடிகிறது. அவரின் இருப்பு எங்களுக்குக் கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது. ஒரு கேப்டனாக, முகமது ஷமியின் முயற்சிகளைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஷமி என்னிடம் வந்து விக்கெட்டுகளை வீழ்த்த அதிக ஓவர்களை கேட்பார். இது கேப்டன்களுக்கு எப்போதுமே ஒரு நம்பிக்கையை அளிக்கும். அணியில் விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் இருப்பது உற்சாகமளிக்கும்.இந்த சீசனில் ஷமி முற்றிலும் மாறுபட்டவராக தெரிகிறார். கடந்த காலங்களில் நான் அவரைப் பார்த்த விதத்தை விட, ஆட்டத்தின் மீதான அவரது அணுகுமுறை, தீவிரம், ஆற்றல் ஆகியவை மிகவும் வித்தியாசமாக உள்ளன.இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடாமல் இருக்கும் போது, உள்ளூர் போட்டிகளுக்கும் அதே போன்ற ஊக்கத்தை வைத்திருப்பது கடினம். ஆனால் அவரிடம் தற்போதும் அந்த வேட்கையும் ஊக்கமும் உள்ளன. அவர் மீண்டும் இந்திய அணியின் ஒரு பகுதியாக மாற விரும்புகிறார்” என்றார் இஷான் கிஷன்.
















