Home மாவட்டங்கள் சென்னை வெயிலில் வேம்பு பனை கருகல்

வெயிலில் வேம்பு பனை கருகல்

கோவில்பட்டி: செப். 15–-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழையின்றி நிலங்கள் இறுகி, கடும் எல்நினோ வெப்பத்தால் வேம்பு, பனை மரங்கள் கருகி வருகின்றன. மேலக்கரந்தை பகுதியில் பனைமரங்கள் கருகியுள்ளன. இந்தாண்டு ராபி பருவத்தில் பயிரிட முடியுமா என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், கயத்தாறு, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 வட்டாரங்களில் சில பகுதிகளைத் தவிர, பெரும்பாலான கிராமங்களில் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் கடைசியாக பிப்ரவரியில் மழை பெய்தது. ஏப்ரல், மே மாதங்களில் கோடைமழை பெய்யவில்லை. கோடைமழை பெய்தால் கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி நிலங்களை நன்கு உழவு செய்வார்கள். ஆனால், பிப்ரவரிக்குப் பின்னர் ஆறு மாதங்களாக ஒரு சொட்டு மழைகூட பெய்யாததால் கோடை உழவு நடைபெறவில்லை.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்காச்சோளம் விதைப்பர். முதல் பருவமழைக்குப் பிறகு உளுந்து, பாசி, கம்பு, பருத்தி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் அடுத்தடுத்து சாகுபடியாகும். கோடை உழவு இல்லாததால் இப்பணிகள் நடைபெறவில்லை.
கடந்த மூன்று மாதங்களாக எல்நினோ தாக்கத்தால் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து, வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சியைத் தாங்கும் பனைமரங்களின் குருத்துகளும் காய்ந்துள்ளன. நீரின்றி நிலங்கள் இறுகியதால், சில இடங்களில் நிலம் பாழாகாமல் இருக்க விவசாயிகள் டிராக்டர் மூலம் உழவு செய்கின்றனர்.நீர்நிலைகள் வறண்டு பாளம் பாளமாக வெடித்துள்ளன. கால்நடைகளுக்குத் தண்ணீரும் மேய்ச்சலும் இல்லை. கிராமங்களில் அன்றாடப் பயன்பாட்டுக்குக்கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது.
கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: “ஆண்டுதோறும் ஆவணியிலேயே விதைகளை ஊன்றுவோம். அவ்வப்போது தூறல் பெய்து விதைகள் முளைக்கும். புரட்டாசி பருவமழையில் பயிர்கள் நன்கு வளரும். ஆனால் இந்தாண்டு இதுவரை எந்த விவசாயப் பணியும் மேற்கொள்ளவில்லை. எல்நினோ வெப்பம் என்ன செய்யக் காத்திருக்கிறதோ என கவலையாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க அரசு முடிவு எடுக்கவில்லை. எல்நினோ வெப்பத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு அரசு உதவ வேண்டும். கிராமப்புறக் குடிநீருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்போதைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் பனைமரங்களும் காய்கின்றன. வேப்பமரங்களில் உதிரும் வேப்பமுத்து கூட கடந்தாண்டை விட குறைந்துள்ளது. பருவமழை மிகவும் தாமதமாகிவிடுமோ என்ற அச்சம் உள்ளது. மாற்றுப்பயிர் சாகுபடிக்கு வேளாண்மைத் துறை அதிகாரிகள் வழிகாட்ட வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசு முழுமையாக உதவ வேண்டும்” என்றார்.