
வாஷிங்டன், செப். 16- விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஒரு ஆயுதத்தை நிலைநிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்கா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. மேரிலாந்தில் உள்ள நேஷனல் ஹார்பரில் நடைபெற்ற விண்வெளி மற்றும் இணைய மாநாட்டில் பேசிய அமெரிக்க விமானப்படை செயலர் ட்ராய் மெய்ங்க், இந்தத் தகவலை வெளியிட்டார். விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக அறிவித்த அவர், அத்தகைய தாக்குதல் திறன்களும் அமெரிக்காவிடம் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், விண்வெளியில் உள்ள அமெரிக்க ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை. வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக விண்வெளிக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக அந்த ஆயுதம் பயன்படுத்தப்படும் என்று மட்டும் அவர் சூசகமாகத் தெரிவித்தார். இதனால், ஆயுதத்தின் தன்மை தொடர்பான விவரங்கள் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. அமெரிக்க விண்வெளிப்படை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “விரோதமான எதிரி நாடுகளிடமிருந்து கூட்டுப்படையைப் பாதுகாக்கும் வகையில், சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளிக் கட்டுப்பாட்டு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளன. இந்தத் திறன்களைத் தாக்குதல் மற்றும் தற்காப்பு நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













