
மதுரை: செப். 16-
மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, கோயில் நகரமான மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் 6,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடத்த கடந்த திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. 2018-ல் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் ரூ.35 கோடியில் சீரமைக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி திறக்கப்பட்டது. சுமார் 8 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த கிழக்கு கோபுர வாசலும் திறக்கப்பட்டு, பக்தர்கள் அவ்வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
கோயில் நிதி மற்றும் உபயதாரர் நிதியில் ரூ.28 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு செப்.17-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
வடக்காடி வீதியில் யாகசாலை பூஜைகளுக்காக 184 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செப்.6-ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. செப்.11-ம் தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு தலா 33 குண்டங்கள், 70 பஞ்சாகினி குண்டங்கள், 42 ஏகாகனி குண்டங்கள், 2 ரிக் கும்பம் உள்பட 184 குண்டங்களில் யாக வேள்விகள் நடைபெறுகின்றன. இதில் சுமார் 350 சிவாச்சாரியார்கள் ஈடுபட்டுள்ளனர். மூலவர்களுக்கு மருந்து சாற்றும் வைபவத்தையொட்டி செப்.11 முதல் 16-ம் தேதி வரை மூலவர் சந்நிதிகள் அடைக்கப்பட்டுள்ளன. எனவே, பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. யாகசாலை பூஜைகளைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்.15-ம் தேதி எட்டாம் கால வேள்வியும், மாலை ஒன்பதாம் கால வேள்வியும் நடைபெற்றன. செப்.16-ம் தேதி காலை 5 மணிக்கு பத்தாம் கால யாக வேள்வி முடிந்து கலசங்கள் புறப்பாடு நடைபெறும். காலை 6 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நடைபெறும். மாலையில் 11-ம் கால யாக வேள்வி நடக்கும். செப்.17-ம் தேதி காலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12-ம் கால யாக வேள்வி நடைபெறும். பின்னர், காலை 7.40 மணியளவில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சந்நிதிகளின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் குடமுழுக்கு நடைபெறும். காலை 7.55 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு சுந்தரேசுவரர் சுவாமிக்கும் குடமுழுக்கு நடைபெறும்.













