Home செய்திகள் தேசிய செய்திகள் யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம்

யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம்

மும்பை: செப். 16-
முதல், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்டிஆர்) கட்டணம் விதிக்கப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது. இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும். சாதாரண நுகர்வோருக்கான யுபிஐ சேவை தொடர்ந்து இலவசமாக இருக்கும்.
கடைகளில் பொருட்கள் வாங்குதல், கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்துதல் உள்ளிட்ட பொதுமக்களின் எந்தப் பரிவர்த்தனைக்கும் கட்டணம் இல்லை. நண்பர்கள், உறவினர்களுக்கு பணம் அனுப்புதல் உள்ளிட்ட தனிநபர்களுக்கு இடையிலான (பி2பி) பரிமாற்றங்களும், சுயக் கணக்குப் பரிமாற்றங்களும் எப்போதும் போல இலவசமாகத் தொடரும். கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் பயனர்களிடம் ‘பிளாட்பார்ம் கட்டணம்’ வசூலிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000 வரையிலான 95 சதவீதத்துக்கும் அதிகமான அன்றாட சிறு வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும். ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பெரிய பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வர்த்தகர்கள் வங்கிகள் மற்றும் யுபிஐ சேவை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும். ரயில்வே, தொலைத்தொடர்பு, பெட்ரோல் பங்க், காப்பீட்டு பிரீமியம், மின்சாரம், நீர் உள்ளிட்ட பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு (ரூ.2,000-க்கு மேல்) சதவீதத்துக்குப் பதிலாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். மூலதனச் சந்தை முதலீடுகளுக்கு 0.02% (அதிகபட்சம் ரூ.300) கட்டணம் பொருந்தும். மாதம் ரூ.1 லட்சம் வரை யுபிஐ மூலம் கட்டணம் பெறும் சிறு வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் (பி2பிஎம்) எம்டிஆர் கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்கு பெறுவர். கிராமப்புறங்கள், சிறு நகரங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தனி நிதியம் அமைக்கப்படும்.