
ஹாசன்: செப். 16:
காதலனுடன் லாட்ஜில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் சாகலேஷ்பூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நாகசந்திராவைச் சேர்ந்த வர்ஷா (வயது 23) என்ற இளம்பெண், தனது காதலன் ரகு மற்றும் நண்பன் தர்ஷன் ஆகியோருடன் சுற்றுலா செல்வதற்காக சாகலேஷ்பூர் தாலுகா வளலஹள்ளி கூடிகே பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள ஒரு லாட்ஜில் ஒரே அறையில் மூவரும் தங்கியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 3 நாட்களாக பெட்டத பைரவேஷ்வரா, மஜகஹள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை அவர்கள் சுற்றிப் பார்த்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை லாட்ஜில் குளிப்பதற்காகச் சென்ற வர்ஷா திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த ரகு மற்றும் தர்ஷன் உடனடியாக அவரை சாகலேஷ்பூர் தாலுகா கிராஃபோர்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இளம்பெண் இறந்துவிட்டது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாகலேஷ்பூர் கிராமப்புற காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













