
கார்டும்: செப். 17-
ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு கோர் டோபன் மாகாணத்தில் எல்-நஹொட் நகருக்கு அருகே செயல்பட்டு வரும் அல்-சாரா தங்கச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில் 60 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம் அல்-சாரா சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சக தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். எனினும், இந்த விபத்தில் 60 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பல தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் நோக்கில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.













