Home மாவட்டங்கள் பெங்களூர் விநாயகர் ஊர்வலத்தின் போது கல்வீச்சு சம்பவம் – போலீஸ் குவிப்பு

விநாயகர் ஊர்வலத்தின் போது கல்வீச்சு சம்பவம் – போலீஸ் குவிப்பு

காரவார்: செப். 17:
கணபதி விசர்ஜன ஊர்வலத்தின் போது மசூதி மற்றும் மதர்சா மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பட்களத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
உத்தர கன்னட மாவட்டம் பட்களம் அருகேயுள்ள குள்மி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் நேற்று இரவு தலாந்தா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் குள்மி ரயில்வே பாலத்தைக் கடந்து சென்றபோது, அருகிலிருந்த இஸ்மாயில் சுன்னி ஜாமியா பள்ளிவாசல் மற்றும் அதன் கீழ் தளத்தில் இயங்கி வரும் தாஜுசுன்னா அரபிக் மதர்சா மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசியதாகக் கூறப்படுகிறது.
ஜன்னல் கண்ணாடிகள் சேதம்:
இச்சம்பவம் குறித்து உள்ளூர்வாசியான அப்துல் அலீம் என்பவர் பட்களம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கல்வீச்சில் கட்டிடத்தின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்பி நேரில் ஆய்வு:
தகவலறிந்த உத்தர கன்னட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (எஸ்பி) தீபன் எம்.என். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக எஸ்பி உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சம்பவத்தையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்க பட்களத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஊர்வலத்தின் போது எடுத்த சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதிர் புகார் பதிவு:
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக தலாந்தா விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி தலைவர் ராஜு என்பவரும் போலீசில் எதிர் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அவரது புகாரில், “விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்ற போது, சில மர்ம நபர்கள் விநாயகர் சிலையை நோக்கி கல்வீசித் தாக்குதல் நடத்தினர். மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் இந்த சதி நடந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இருதரப்பு புகார்களின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.