
புதுடெல்லி, செப். 20-டெல்லி பல்கலைக்கழக மாணவர் யூனியன் (டியூஎஸ்யூ) நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்தலில் டியூஎஸ்யூ-வின் 4 மத்திய நிலைக்குழு பதவிகளில் 3 பதவிகளை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினர் கைப்பற்றினர். டியூஎஸ்யூ தலைவராக ஏபிவிபி அமைப்பின் யாஷ் தபாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 24,576 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்எஸ்யுஐ) விஜய் சங்கர் 22,523 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் தலைவர் பதவியில் யாஷ் தபாஸ் வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு என்எஸ்யுஐ வேட்பாளருக்கு எதிராக அதிருப்தி வேட்பாளராக தீபான்ஷி ஷோகீன் போட்டியிட்டார். அவர் 30,615 வாக்குகள் பெற்று துணைத் தலைவராகத் தேர்வானார். இந்தப் பதவிக்குப் போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் இஷு மவுர்யா 16,910 வாக்குகளைப் பெற்றார். என்எஸ்யுஐ வேட்பாளர் வீர் சத்ரத் 4,313 வாக்குகளை மட்டுமே பெற்றார். டியூஎஸ்யூ செயலாளர் பதவிக்கு ஏபிவிபி அமைப்பின் ரியா சாவ்டி தேர்வாகியுள்ளார். இணைச் செயலாளர் பதவியையும் ஏபிவிபி கைப்பற்றியுள்ளது. அந்தப் பதவிக்கு அக்கட்சியின் லக்சய் ராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதனால், தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய மூன்று முக்கிய பதவிகள் ஏபிவிபி வசம் சென்றுள்ளன. துணைத் தலைவர் பதவியை தீபான்ஷி ஷோகீன் வென்றுள்ளார். டியூஎஸ்யூ நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மத்திய நிலைக்குழுவில் ஏபிவிபி 3 பதவிகளைப் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.














