Home செய்திகள் தேசிய செய்திகள் மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜகவுக்கு துணிவில்லை

மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜகவுக்கு துணிவில்லை

புதுடெல்லி, செப். 20-
மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத்தேர்தலை நியாயமான முறையில் எதிர்கொள்ள பாஜகவுக்கு துணிவு இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கைது செய்யப்பட்ட விவகாரம், இந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பான குற்றச்சாட்டு, எஸ்ஐஆர் நடவடிக்கையின் கீழ் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் உள்ளிட்டவை குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரமோத் திவாரி கூறியதாவது: எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜகவினர் மிரட்டுவது, அச்சுறுத்துவது அல்லது தங்கள் பக்கம் இழுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நியாயமான முறையில் தேர்தலை எதிர்கொள்ள அவர்களுக்கு துணிவு இல்லை. அதனால்தான் 20 ஆண்டுகள் பழமையான வழக்கில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கில் அவரிடம் எந்தத் தவறும் இல்லை. அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக அவர் பொதுவெளியில் செயல்பட்டு வந்தார். ஜனநாயக முறைப்படி தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறும் வாய்ப்பு பாஜகவுக்கு இல்லையா? எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது அல்லது சிறைக்கு அனுப்புவது அவர்களது வழக்கமாக உள்ளது. இந்தூரில் ராகுல் காந்தி பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை விமர்சித்ததாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார். ராகுல் காந்தியின் பேச்சை இரண்டு முறை கேட்டேன். அதில் யாருடைய தாயார் குறித்தும் அவர் கருத்து தெரிவிக்கவில்லை. எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் டெல்லி முன்னாள் முதல்வர், வருமான வரித்துறையில் அதிகாரியாக உள்ள அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணி நடைபெறுகிறது. தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்காத அல்லது வாக்களிக்காத வாக்காளர்களை பாஜக இதன் மூலம் நீக்குகிறது என்று பிரமோத் திவாரி தெரிவித்தார்.