
புதுடெல்லி: செப். 23-
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையையொட்டிய பகுதியில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கறிஞர் ஜெய்சுகின் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்குத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
தமிழக அரசு ரூ.10.98 லட்சம் கோடி கடன் சுமையில் உள்ள நிலையில், மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி இல்லாத சூழலும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பிரச்சினைகளும் நிலவுகின்றன. இந்நிலையில், ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது மாநிலத்தின் நிதிநிலையைக் கடுமையாகப் பாதிப்பதோடு, தமிழகம் மீண்டும் மீண்டும் கடனில் மூழ்கும் சூழலை ஏற்படுத்தும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டிடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள பட்டினப்பாக்கம், அரிய வகை ஆமைகள் வழக்கமாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அங்கு பிரம்மாண்டமான கான்கிரீட் கட்டுமானங்களை மேற்கொள்வது கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தை மோசமாகப் பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் அதிகளவில் மீனவர்கள் வசிப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் அப்பகுதியைச் சார்ந்துள்ளது.
எனவே, 25 ஏக்கரில் தலைமைச் செயலகம் அமைப்பது மீனவர்களைப் பாதிக்கும் என்றும், அறிவிப்பு வெளியான நாள் முதல் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மயிலாப்பூர் வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசாணையில் சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், மீன்வளத் துறை ஆகியவற்றின் ஒப்புதல் குறித்து குறிப்பிடப்படவில்லை என்றும், நிதி நெருக்கடி நிலவும் வேளையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை தன்னிச்சையானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.










