Home செய்திகள் தேசிய செய்திகள் சிஆர்பிஎப் பெண்கள் பிரிவு தொடங்கி 40 ஆண்டுகள்

சிஆர்பிஎப் பெண்கள் பிரிவு தொடங்கி 40 ஆண்டுகள்

புதுடெல்லி: செப். 23-
மத்திய பாதுகாப்புப் படைகளில் பழமையான படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆர்பிஎப்) பெண்கள் நியமிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பணியில் முக்கியப் பங்காற்றிய வீராங்கனைகள் கவுரவிக்கப்பட உள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட சிஆர்பிஎப்பில் ஆரம்பத்தில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். பின்னர், முதன்முறையாக 1986-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி தனிப் படைப் பிரிவு தொடங்கப்பட்டு, பெண்களும் கமாண்டோக்களாக சிஆர்பிஎப்பில் பணியமர்த்தப்பட்டனர். அந்தப் பெண்கள் படைப் பிரிவு தொடங்கப்பட்டு, வரும் செப்டம்பர் 25-ம் தேதியுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதையொட்டி, சிஆர்பிஎப் சார்பில் சிறப்பு விழா நடத்தப்பட உள்ளது. இதில், கடந்த 40 ஆண்டுகளில் படையில் பணியாற்றிய வீராங்கனைகள் கவுரவிக்கப்பட உள்ளனர். சீருடை அணிந்து நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்று பணியாற்றுவது மிகவும் கடினமானது எனக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, தீவிரவாதம் மற்றும் நக்சலிசத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்பதுடன், தேவைப்படும் நேரங்களில் நாட்டுக்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இத்தகைய சவால்களுக்கு மத்தியில், சிஆர்பிஎப் பெண் வீராங்கனைகள் கடந்த 40 ஆண்டுகளாக ஆண் வீரர்களுக்கு இணையாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்புப் பணிகள், முன்னணிச் செயல்பாடுகள் உள்ளிட்ட பொறுப்புகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சிஆர்பிஎப் தகவலின்படி, தற்போது நாடு முழுவதும் முக்கியமான பாதுகாப்புப் பகுதிகளில் 6 பெண் படைப் பிரிவுகள் பணியில் உள்ளன. பெண்கள் படைப் பிரிவு தொடங்கப்பட்டதன் 40-வது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெறும் விழாவில், அதன் வளர்ச்சிக்கும் பணிக்கும் பங்களித்த வீராங்கனைகள் நினைவுகூரப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர்.